Tag Archive | ஊமை மொழிகள்

வார்த்தைகளின் வார்த்தைகள்


எல்லா இடத்திலும் எல்லோரிடத்திலும் எல்லோராலும் ஒரே மாதிரி இருந்துவிட முடிவதில்லை , ஆளுக்கேற்ற மாதிரி ஆடை உடுத்தி இடத்திற்கேற்ற மாதிரி நடிக்க வேண்டிய நாகரீக கோமாளிகளாகத்தான் நாமனைவரும் இருக்கிறோம், “உண்மையாக யாருமே இல்லை” என வருத்தப்படுகிறவர்களால் கூட உண்மையான முகங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதும், அவர்களால் கூட உண்மையான முகத்துடன் எப்போதும் இருக்க முடிவதில்லை என்பதும் தான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அவன் ஒரு நடிக்கத்தெரியாத அப்பாவி, மிக எளிதில் மனமுடைந்து போகும் இலகுமன பிராணி , ஆளுக்கேற்ற மாதிரி பச்சோந்தியாக தெரியாத படுபாவி., போலிகளை கண்டு கண்டு கடுப்பாகி வெறுப்பின் உச்சத்தில் யாவரையும், யாவற்றையும் வெறுத்து ,தனது நம்பிக்கையை வார்த்தைகள் கொண்டு கிழித்தெறிந்து எரித்தழிக்க முயல்கிறான் அவன் . வார்த்தைகள் மெல்ல மெல்ல அர்த்தமிழந்து அவனிடத்தில் மௌனமாகிப்போய் நிற்கிற போது அவன் வார்த்தைகளை வார்த்தைகளால் ஏசுகிறான்… (வார்த்தைகளும்  வாய்திறந்து அவனோடு பேசின …)

ஏய் வார்த்தைகளே !!

ஏய் வார்த்தைகளே !!

உங்களை வீசித்தானே எல்லோரும்

காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் !

என் கைக்கு மட்டும் ஏன் உங்களை

வீசி எரியும் வித்தை வாய்க்கவில்லை

உங்களை கொண்டு தானே

என்னை ஏமாற்றுகிறார்கள்

ஏன் நீங்கள் என்னிடத்தில்

வாய் திறந்து சொல்லவில்லை !

உங்களை நம்பித்தானே

என்னையே மறுதலித்து

என்னையும் அடமானம் வைத்தேன்

ஏன் நீங்கள் தடுக்கவில்லை !

அவனி முழுக்க நிறைந்திருக்கும்

அத்தனை வர்த்தைகளும்

ஆதரவேதுமின்றி !

அர்த்தமிழந்து அலையட்டும் !

ஹ்ம் ..

உங்களை ஏசக் கூட

உங்கள் உதவிதானே

தேவைப்படுகிறது

எங்களுக்கு !

அந்த திமிரோ ?

உங்களையே சேர்த்து

உங்களிடத்தில் கேட்கிறேன்

உள்ளது உள்ளபடி

உண்மை சொல்வீர்களா ??

உங்களின் நிரந்தர இருப்பிடம் எங்கே ?

எங்கே இருக்கிறீர்கள் நீங்கள் ?

பேச்சின் பின்னாலா ?

எழுத்தின் பின்னாலா ?

வாசிப்பின் பின்னாலா ?

பின்னும் நாங்களில்லை

முன்னும் நாங்களில்லை

எல்லாமும் எல்லோரும்

எங்கள் பின் இருப்பதனை

அறியாயோ மானிடனே !

சர்வம் வார்த்தை மயம் !!

உங்களைக்கொண்டு தானே

நாங்களே பேசிக்கொள்கிறோம்

நீங்கள் கூட பேசுவீர்களா?

இத்தனை கால மௌனம்

உடைபட்ட மாயம் ?

இதுவரைக்கும் எம்மை யாரும்

உம்மைப்போல எரித்ததில்லை

உண்மையைச் சொல்லச் சொல்லி

உலுக்கியும் எடுத்ததில்லை.

ஓ!

அழுதிட்ட பொழுதுகளில்

அறுதலாய் வரவில்லை

அடித்துலுக்கிக் கேட்கையிலே

பதில் சொல்ல வந்தீர்களோ??

பேசப்படும் பொருளும்

பேச்சும் பொருளும் நாமே !!

பேச்சில் மறைந்திருக்கும்

சத்தமும் அமைதியும் நாமே !!

கேட்கிற சக்தியிருந்தால்

கேட்கமலேயே கேட்கும்

நாங்கள் கூறும்

ஆறுதல்கள் அறிவுரைகள்

அமைதியான பேருரைகள் !

ஏனெனக்குக் கேட்கவில்லை?

அழுகிற பொழுது அழுகையிலும்

சிரிக்கிற பொழுது சிரிப்பினிலும்

பேசுகிற போழுது பேச்சினிலும்

எதன்போதும் ஏதோ ஒன்றால்

எப்போதும் எம் குரலை

மறைத்து விடுகிறீர்கள் !!

மறுபடியும் உம்மை கேட்கிறேன்

ஏனெனக்கு

உங்களை வீசியெறிந்து

காரியம் சாதித்துக் கொள்ளும்

வல்லமை வாய்க்கவில்லை?

யாருக்கும் கேட்டிராத எம் குரலை கேட்பவனே !!

வல்லமை இல்லையென்று

சொன்னவன் எவனுனக்கு !!

எதைக் கொண்டு எமையிழுத்தாய் !

 எப்போதும் எம்மருள் தப்பாது உமக்குண்டு !

 ஒரு நிமிசம்….

 கயவர்களுக்கும் கூட

 உன் வல்லமை வாய்த்திருக்கிறதே ??

 காரணம் ??

 எம்மை நம்பி வாய்திறக்கும் யாவருக்கும்

 நன்று தீது பாராமல் எங்களருள் கிடைப்பதுண்டு !!

 எல்லோர் வார்த்தைகளையும் நம்பி விடாதே

 ஆனால் வார்த்தைகளின் உள்ளிருக்கும்

 வார்த்தைகளின் வார்த்தைகளை நம்பு !!….
 வேறு யாரோ கூப்பிடுகிறார்கள்

 வருகிறோம் !!!!

    

   

Advertisements

நகர(நரக)மழை

           மழைநீரில் தன்னை முழுவதும் நனைத்திருக்கும் மின் கம்பி:         இடம்:சென்னை கோயம்பேடு
 
 
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த மழை
 (மழையை ரசிப்பதற்கும்,மழையில் நனைவதற்கும் நம் அன்றாட பணிகள் மற்றும் அலுவல்களுக்கிடையில் நேரம் இருப்பதில்லை,அன்பின் ஊற்றாக வானம் பூமி மீது ஊற்றும் மழை மீது நமக்கு பெறும்பாலும் வெறுப்பு தான் வருகிறது,நகர வாழ்வில் மழை என்பது நரகமாக தான் இருக்கிறது)அன்றைக்கு மழையின் வீச்சு பூமி மீது கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.மழையை திட்டிய படியே என் அலுவலக பணிக்கு பேருந்து பிடிக்க சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன்…சரசர ஓசையில் மெல்லிய குரல் ஒன்று கேட்டது… அது வெறும் மழையின் சரசரப்பு தான் யாரோ பேசுவது போலவே என் காதுகளுக்கு கேட்டது.துளித்துளியாக பூமி வரும் மழையில் ஒரு துளி மெல்ல என் காதருகே வந்து என்னோடு பேச துவங்கிற்று…இப்பொழுதெல்லாம்…

எங்களை ஏன் யாரும் ரசிப்பதே இல்லை?

எங்களின் வாழ்வின் அதாரம் “நீர்” என்று

எப்போதும் எங்களை வாயார புகழ்வீர்களே!

எங்கே போனீர் எங்களை வரவேற்காமல்…நித்தமும் நீங்கள் வேண்டுகிறவர்கள்

மொத்தமாய் வந்திருக்கிறோம்

வரவேற்க வில்லை என்றாலும் பரவாயில்லை

கொட்டித்தீர்க்கும் எங்களை திட்டி தீர்க்காதீர்கள்சாலைகளை சிதைத்து

சாக்கடைகளை நிறைத்து

தொல்லை தர பூமி வந்த 

தொல்லை கும்பல்

இல்லை நாங்கள் !மரங்களின் கையசைப்பில் மனமிரங்கி

தரை இறங்கி தரணி வந்தவர்கள்

வற்றிக்கொண்டிருக்கும் உயிர்த்துளியை

துளித்துளியாய் நிறைக்க வந்தவர்கள்வேலைகளை முடக்க வந்த 

முட்டாள் மழையென்று

முனுமுனுப்பு செய்பவர்களே !அன்றாட வாழ்வை பாதிக்க வந்த

படுபாவி மழையென்று

பல்லவி பாடுபவர்களே !கொஞ்சம் கவனியுங்கள்ஓய்வின்றி சுற்றும் பூமி

காய்ந்து விடாதிருக்க

கடவுள் அனுப்பிவைத்த

கருணை மனுக்கள் நாங்கள்பால் வற்றிப்போன 

பூமியின் தனங்களில்

மீண்டும் பால் சுரக்க

மருந்தாய் வந்தவர்கள்எம்மை சேமிக்க சொல்லி 

விளம்பரங்கள் செய்கிறீரே !நாங்கள் நகரக்கூட

இந்த நகரத்தில் இடமில்லை

வரவுக்கே “வழி”யில்லை

எம்மை எங்கே சென்று சேமிப்பீர்பாராட்ட சொல்லியோ!

வசைபாட சொல்லியோ!

உங்களை ஒருபோதும்

நாங்கள் கேட்டதில்லை !எங்களுக்கும் அரசியல் தெரியும்

அதிகம் பெய்து அழிக்கவும் செய்வோம் !

அளவாய் பெய்து காக்கவும் செய்வோம் !

பெய்யாதிருந்து வதைக்கவும் செய்வோம் !நீங்கள் வசிக்கும் உலகை

வளர்த்து விட்டவர்கள் நாங்கள்

உறுதியாய் கூறுவோம்

உங்களுக்கு உயிர் தந்தவர்கள் நாங்கள்பூமி காப்பது உங்களுக்கு கடமை

பூமி காப்பது எங்களுக்கு உரிமை

                                                                                           -விஜயன்


நான் கவிதைகளை தனியாக வானம்பாடி என்ற தளத்தில் எழுதி வருகிறேன்,இனி கடற்கரையிலும் எழுத தீர்மானித்துள்ளேன்,கவி வானில் சுற்றி திரியும் வானம்பாடி இனி என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கடற்கரையிலும் பறக்கும்.