கவிதையோடு சில நிமிடம் (கவிஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு)

 

ரவு தன் அகண்ட கருவிழிகளைக் காணும் திசையெங்கும் பரப்பியபடி விழித்திருந்தது. என் காதுகளுக்குள் விக்கலும், விசும்பலும், அழுகையுமாகக் கேட்ட அந்தக் குரலை பின் தொடர்ந்து தூங்காத எனது இன்னொரு இரவை விழித்த விழிகளுடன் கடந்து கொண்டிருந்தேன்.
யாருமற்ற தனிமையில் யாரோடும் பேசாமல் வார்த்தைச் சுழலுக்குள் சிக்கி மூச்சுத் திணறியபடி அழுது கொண்டிருந்தது கவிதையொன்று. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான இடைவெளியில் நின்றபடி உயிர்கயிறை இறுக்கமாக பற்றி ஊசலாடிக்கொண்டிருந்தது.
என்ன செய்துவிட முடியும் என்னால் , தவித்துக்கொண்டிருக்கும் கவியைச் சற்றே தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தேன். அதன் மூச்சுத்திணறல் இன்னும் இன்னும் அதிகமாகிக்கொண்டேயிருந்தது
தண்ணீர் வேண்டுமா ? “ கையிலிருந்த தண்ணீர் புட்டியை நீட்டினேன்.
நீட்டிய புட்டியை நீள்கரம் கொண்டு பற்றி நீரினை பருகியபடிநீர் !” என்றது.
நானா?”
ஆம்
கேள்வி கேட்டது கவிதை என்பதால் கர்வத்தோடுநான் ஒரு கவிஞன்என்றேன்.
பெரும் சிரிப்புச் சிரித்தது தனது மூச்சுத் திணறல் மறந்து, அழுகையை மறந்து
ஏன் சிரிப்பு ?
மறுபடியும் இடைவெளி இல்லாத அந்தச் சிரிப்பு.
“இத்தனை அழகாய் சிரிக்கிறாயே… , ஏன் அழுதுகொண்டிருந்தாய்…!”
கட்டாயம் சொல்கிறேன், தண்ணீர் தந்தவனாயிற்றே!“
சொல்என்றேன்
 
உன் மனக்கோப்பைக்குள் மணித்துளிகள் நிரப்பிக்கொள் !”
ம்என்றபடி நான் சன்னமாகச் சிரித்தேன்.
ஏன் சிரிப்புஎன்றது.
அதொன்றுமில்லை கவிதை ஒன்று கவிஞனாகி கவிதை சொன்னதால் , கவிஞன் எனக்குள் கவிதை உதித்துச் சிரிப்பாகக் கசிந்துவிட்டது.”
அது சரி , இப்போது நான் பேசியதை கவிதை என்கிறாய் !! , அழகான வார்த்தைகளை அடுத்தடுத்து அடுக்கி வைத்தால் கவிதை , என்று எவன் உன்னிடத்தில் சொல்லிக்கொடுத்தான்.” சிரித்தது.
நானும் சிரித்தேன்.. இருவருமே சிரித்துக் கொண்டோம்.
அது இருக்கட்டும் நீ ஏன் கவிஞன் ஆனாய்என்றது.
அது ஒரு விபத்து, நீ மூச்சுத்திணறி அழுது கொண்டிருந்ததன் காரணத்தைச் சொல்கிறேன் என்றாயே !”
சொல் மூட்டைப் பொதியொன்றின்
சுமை பொறுக்க முடியாமல்,
தப்பிக்கத் தலைப்பட்டேன்
முடியாமல் சிறைபட்டேன்,
சொல் மூட்டை எனை வதைக்க
வார்த்தைக்குள் அடைபட்டு
வாய்திறக்க முடியாமல்
சுவாசம் தடைபட்டேன்,
உந்தன் கண்பட்டேன் ! “
சொல்மூட்டையின் பொதியால் இறக்கும் நிலை வரையில் சென்றாயா ! ஆச்சரியமாக உள்ளதே. “
மௌனமாக இருந்த அதை நோக்கி கேட்டேன்எத்தனை வார்த்தைகளை அல்லது சொற்களை உம்மால் சுமக்க முடியும், இத்தனை என்று எதுவும் வரைமுறை, விதிமுறைகள் உள்ளனவா ?”
இத்தனை என்று வரைமுறையெல்லாம் எதுவுமில்லை, எத்தனை சொல்லும் சுமப்போம் யாம் !”.
இதென்னடா ! குழப்பம், முரணாகத் தெரிகிறதே, எத்தனை சொல்லும் சுமப்பாய் என்றால் சொற்பொதி தாளாது சோர்ந்தது ஏன்”.
எங்களால் சொற்களைச் சுமக்க முடியும் , ஆனால் சொற்களால் உருவாக்கப்பட்ட மூட்டைகளை அல்ல”.
விளங்கவில்லையேகொஞ்சம் விளக்கிச் சொல்வாயா !”.
என் கையைப் பிடித்து, உள்ளங்கை விரித்து அதிலொரு காகிதத்தை எடுத்து வைத்தது.
காகிதம் பறக்கும், சரிதானே…”
ம், காற்று வீசினால் பறக்கும்என்றேன்.
அந்தக் காகிதத்தைக் கசக்கி ஒரு பந்து போலாக்கி மறுபடியும் என் கையில் வைத்தது.
இது பறக்குமா !”
சத்தியமாகச் சாத்தியமில்லை, வேண்டுமென்றால் நன்றாகக் காற்று வீசினால் நகரும்”.
பெருங்குரலெடுத்துப் பேசத்துவங்கியது, “ சொல் என்பது பொதுவாகவே சுமை தான், சொற்களின் கூட்டம் என்பது பெருஞ்சுமை, கசங்கின காகிதம் மாதிரி அவைகளால் ஒருபோதும் பறக்க இயலாது, சொற்களை ஏதொரு மாற்றமுமின்றி , காரணமின்றிக் கண்டபடி அடுக்கி வைத்து எம்மீது ஏற்றினால் மூச்சுத் திணறாது என்ன செய்யும். பல சமயங்களில் மூச்சுத் திணறி, சுவாசம் சுத்தமாக நின்றுபோய் நாங்கள் மரித்துப்போவதும் கூட உண்டு., தண்ணீர் பிரிந்த மீன் குஞ்சுகள் போலத் துடிதுடித்துச் செத்துப்போயிருப்போம்வார்த்தைக் குவியல்களுக்குள் கவிதையின் பிணங்கள் அமிழ்ந்து கிடக்குமே கண்டதில்லையா நீ !”
ம்..”
கவிதையின் பிணங்களில் பின்னப்பட்ட வார்த்தை அடுக்குகள் ஒருபோதும் கவிதையல்ல , புரிந்துகொள் அவற்றை உயிர்ப்பிக்க முடியாது, பார்நான் கூடச் செத்திருப்பேன் நீர் ஊற்ற ஆளின்றி நிராதரவாய் நின்றிருந்தால்,”. கூப்பிய அதன் கரத்தைத் தொட்டு ஸ்பரிசித்தேன்.
உயிரோடு உம்மை வார்த்தைக்கோட்டைக்குள் சிறை வைக்க இயலாதா ?”.
பறவைகளைச் சிறை வைத்தல் பழிச்செயல்”.
பின் எப்படி உங்களை வார்த்தைகளில் , வார்த்தைகளால், வார்த்தைகளுக்குள் வசப்படுத்த முடியும்”.
கண்ணுக்குப் புலப்படாமல் கண்முன்னாலேயே நிற்கும் எங்களைக் கண்டுகொள்ளப் பழக வேண்டும், முதலில் “.
அப்புறம்
கண்டுபிடித்த எங்களை வார்த்தைக் கயிற்றில் வலிக்காமல் மெல்ல கட்ட வேண்டும்,”.
கட்டுதல் தவறில்லையா”.
அன்னைத் தன் குழந்தையை வேலை செய்து கொண்டிருக்கையில் கட்டி வைத்திருந்து பின் கட்டி அணைத்துத் தூக்குவதில்லையா ?, அதே மாதிரி
ஓ !
பின், கட்டிய வார்த்தைக் கயிற்றை வார்த்தையாலேயே அவிழ்த்து எம்மை விடுவிக்க வேண்டும்”.
அதெப்படி சாத்தியம்
அது கவிஞனின் சாமர்த்தியம்
.”
சொல்லின் சுமை களைந்து அதைச் சிறகுகள் போலாக்கி எம்மைச் சுற்றிலும் ஒட்ட வேண்டும், தேர்ந்த சிறகுகள் கொண்டு இறக்கைகள் செய்து எமக்கு அணிவிக்க வேண்டும்”.
வானமென்ற அந்த நீலப்பெரும்பறவை இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் தூக்கி பறக்கிறதே அது போல எம்மை வாசிக்கிற அத்தனை பேரையும் தூக்கி சுமந்து பறக்கும் வல்லமையைத் தர வேண்டும்
தூக்கி சுமக்கையில் சுமை இருக்காதா உமக்கு
அது சொற்களால் பின்னப்பட்ட எம் இறக்கைகளின் வலிமையைப் பொருத்தது”.
இப்போது உன் சுமை எப்படி இருக்கிறது என்றேன்”.
இன்னும் அப்படியே தான் இருக்கிறது, உம்மோடு பேசியதில் கொஞ்சம் மறந்திருந்தேன்”..
மெல்ல அதன் மீது ஒட்டியிருந்த சொற்களை ஒவ்வொன்றாய்க் களைந்தெறிந்தேன்.
அந்த இரவு முழுவதும்  அது என்னோடு பேசிக்கொண்டேயிருந்தது…பின் என்னிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு சிறகுகள் இல்லாமல் , இறக்கைகள் இல்லாமல், அப்போது தான் வெளுத்திருந்த அந்த நீல வானின் கீழே நீல நிறமாகி சொற்கள் ஏதுமின்றிச் சுதந்திரமாய்ப் பறக்கத்துவங்கியது.

அதன் பறத்தலை பார்வையால் பின் தொடர்ந்து வானத்தையே பார்த்தபடி நின்றேன் ! சில நிமிடங்களுக்கெல்லாம் வானமாகிப் போயிருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s